UPDATED : பிப் 29, 2024 03:39 AM
ADDED : பிப் 28, 2024 11:44 PM

புதுடில்லி: உச்ச நீதிமன்றம் தொடர்பான தகவல்கள் மற்றும் சுற்றறிக்கைகளை மாநில மொழிகளிலும் வெளியிட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் ரோகித் பாண்டே கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் ஒரு குட்டி இந்தியா என்பதால், சங்கத்தின் சுற்றறிக்கைகளை ஹிந்தி, உருது, கன்னடம், வங்கம், மராத்தி மற்றும் அசாமி ஆகிய மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வரலாற்றில் முதன் முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் தகவல் தொடர்பு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிக், சந்தீப் மேத்தா மற்றும் பிரசன்ன பாலசந்திர வரலே ஆகியோருக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான சுற்றறிக்கையை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை குறிப்பிட்ட மாநில மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

