ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
UPDATED : ஜன 30, 2024 09:14 PM
ADDED : ஜன 30, 2024 08:57 PM

புதுடில்லி :'ஜம்மு - காஷ்மீரில், இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பாக, சிறப்பு கமிட்டியின் மறுஆய்வு உத்தரவுகள் அலமாரியில் வைத்து பாதுகாப்பதற்கு அல்ல' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இன்டர்நெட் சேவை துண்டிக்கப் பட்டது.இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் 2020ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பரிசீலிக்க, மத்திய உள்துறை செயலர் தலைமையில் சிறப்பு கமிட்டி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கமிட்டி கூடி, இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து மறு ஆய்வு செய்தது. ஆனால் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த மறு ஆய்வு கூட்டத்தின் உத்தரவுகளை வெளியிட ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி, 'பவுண்டேஷன் பார் மீடியா ப்ரொபஷனல்ஸ்' என்ற அமைப்பு உச்ச நீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மறு ஆய்வு உத்தரவுகள் அலமாரியில் வைத்து பாதுகாப்பதற்கு அல்ல; அவை வெளியிடப்பட வேண்டும்' என உத்தரவிட்டதுடன், அதை உடனே வெளியிடும்படி, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜுக்கு உத்தரவிட்டனர்.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற, அவர் அவகாசம் கோரினார். இதையடுத்து இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது மறு ஆய்வு உத்தரவை வெளியிட அறிவுறுத்தியது.