ADDED : பிப் 22, 2024 01:37 AM
புதுடில்லி:கிரிமினல் வழக்கில் ஒரு வரியில் உத்தரவு பிறப்பித்து, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஐந்து மாதங்கள் கழித்து விரிவான தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மதிவாணன், கிரிமினல் வழக்கு ஒன்றில், 2017 ஏப்., 17ம் தேதி ஒரு வரியில் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர், மே 26ம் தேதி ஓய்வு பெற்றார்.
எனினும், இந்த வழக்கில் ஐந்து மாதங்கள் கழித்து, அதாவது, 2017 அக்., 23ல், 250 பக்கங்கள் அடங்கிய விரிவான தீர்ப்பை அவர் வெளியிட்டார். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கிரிமினல் வழக்கில், 2017 ஏப்., 17ல், ஒரு வரியில் தீர்ப்பு வழங்கிய மதிவாணன், மே 26ல் தான் ஓய்வு பெற்றார்.
முழுமையான தீர்ப்பை வெளியிட ஐந்து வாரங்கள் அவகாசம் இருந்தும், அப்போது வெளியிடாமல், ஓய்வு பெற்ற பின், ஐந்து மாதங்கள் கழித்து விரிவான தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதை ஒருபோதும் ஏற்க முடியாது. பதவியை ராஜினாமா செய்த பின், ஐந்து மாதங்களுக்கு ஒரு வழக்கின் கோப்புகளை வைத்திருப்பது மிகவும் முறையற்ற செயல். ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.