மணிப்பூர் கலவர பாதிப்பு விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
மணிப்பூர் கலவர பாதிப்பு விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
UPDATED : டிச 09, 2024 10:55 PM
ADDED : டிச 09, 2024 10:51 PM

புதுடில்லி, மணிப்பூர் கலவரத்தின்போது, முழுமையாக அல்லது பகுதியாக எரிந்த கட்டடங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட கட்ட டங்கள் உள்ளிட்டவை தொடர்பான முழு விபரங்களையும் அளிக்கும்படி, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே கடந்தாண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது.
இது வன்முறையாக மாறி, 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் முன்னாள் பெண் நீதிபதிகள் மூவர் அடங்கிய குழுவையும் அமைத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
புலம்பெயர்ந்த மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது, அவர்களுடைய சொத்துக்களை மீட்டுத் தருவது ஆகியவற்றில் மாநில அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
வன்முறைகளில், முழுமையாக மற்றும் பகுதியாக எரிந்த கட்டடங்கள், சேதமடைந்த கட்டடங்கள், சூறையாடப்பட்ட கட்டடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவை எத்தனை என்பது தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவர்களிடம் வசூலிக்கப்பட்ட இழப்பீடு போன்ற தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை சீலிட்ட உறையில் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மூன்று பெண் நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை, வரும் ஜன., 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.