தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
ADDED : மே 06, 2025 03:10 AM

புதுடில்லி : குற்றவியல் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்காததற்காக ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தீர்ப்புகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், 'ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை முடிந்த நிலையில், 2022ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜனவரி 2022 முதல், டிசம்பர் 2024 வரை டிவிஷன் பெஞ்ச் விசாரித்த 56 குற்றவியல் மேல்முறையீடுகளில், தீர்ப்பு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீண்ட காலமாக தீர்ப்பு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
'உயர் நீதிமன்றத்தின் இத்தகைய செயல்பாடுகளை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் சில வழிகாட்டும் விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்.
'எனவே, 2025 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, இன்றுவரை தீர்ப்பு அறிவிக்கப்படாத வழக்குகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அனைத்து உயர் நீதிமன்றங்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

