கட்சி தாவிய எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு; விரைவாக முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் கெடு
கட்சி தாவிய எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு; விரைவாக முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் கெடு
ADDED : பிப் 11, 2025 04:33 AM
புதுடில்லி: தெலுங்கானாவில், ஆளும் காங்கிரசுக்கு தாவிய எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் குறித்து விரைவாக முடிவு எடுக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். மேலும், ஏழு எம்.எல்.ஏ.,க்களும் காங்கிரசுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, கட்சி தாவிய மூவரை தகுதிநீக்கம் செய்யும்படி அளித்த மனு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.எஸ்., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், 'தகுதி நீக்க மனு மீது நியாயமான காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.
'சட்டசபை செயலர் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் நியாயமான காலத்தை நிர்ணயிக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க நேரிடும். ஜனநாயகத்தில், இதுபோன்ற தாமதங்களால் அரசியல் கட்சிகளின் உரிமைகளை பறிக்க முடியாது.
'அனைத்து உரிமைகளையும் மதிக்கிறோம் என்பதற்காக பார்லிமென்ட் சட்டத்தை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது' என்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தில் விரைவாக முடிவு எடுக்க உத்தரவிடும்படி, பி.ஆர்.எஸ்., சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை பிப்., 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

