சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
ADDED : நவ 29, 2024 10:01 PM

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.
ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.
இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகத்தினர் தொடர்ந்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூன்று வேலை நாட்களுக்குள் பட்டியலிட வேண்டும்.
ஏதேனும் மறு ஆய்வு, இதர மனுக்கள் இருந்தால், அவையும் மூன்று வேலை நாட்களுக்குள் பட்டியலிடப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம்.
சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.