பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ADDED : நவ 29, 2024 07:49 PM
புதுடில்லி:தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த, 2001 - 06 வரையிலான அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்வராகவும் பன்னீர் செல்வம் பதவி வகித்தார்.
அந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது இரு மகன்கள் ராஜா மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு எதிராக 2006 தி.மு.க., ஆட்சியில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு விசாரணையை முடித்து, தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பிறகு, 2011ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பின், இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 2012, டிச., 3ல், லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கை சிவகங்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன் முடிந்து போன இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு கடந்த அக்., 29ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே விசாரித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மறு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், இதே கோரிக்கை தொடர்புடைய வேறு சில வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், தன்னுடைய வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீது எதிர்மனுதாரர்கள் நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.