'டிஜிட்டல் கைது' வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் யோசனை
'டிஜிட்டல் கைது' வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் யோசனை
ADDED : அக் 28, 2025 02:33 AM

'நாடு முழுதும், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நடக்கும் சைபர் கிரைம் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், 'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம், பொது மக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது.
நாடு முழுதும் நடக்கும் இந்த வகை மோசடியால், அரசு அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். டிஜிட்டல் கைது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்ஸி அமர்வு கூறுகையில், 'டிஜிட்டல் கைது விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். இதற்கு நாடு முழுதும் ஒரே மாதிரியான விசாரணை அவசியம். இந்த வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம். எனினும், அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியும்' என்றது.
அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உதவியுடன், ஏற்கனவே சில வழக்குகளை சி.பி.ஐ., விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
'பொன்ஸி' போன்ற பெரும் நிதி மோசடி திட்டங்களில் சி.பி.ஐ., திணறியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் நிர்வகிக்கும் திறனும், வளங்களும் சி.பி.ஐ.,க்கு உள்ளதா என்பதை மதிப்பிடும்படி அறிவுறுத்தினர்.
மேலும், இந்த மோசடி தொடர்பாக, இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை வழங்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவ., மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

