தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
ADDED : பிப் 19, 2025 02:57 AM

புதுடில்லி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 2023 மார்ச்சில் இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவே, இந்த நியமனங்களை செய்யும்' என, நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் முடிவு எடுக்கும் வகையில், 2023 இறுதியில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டதால், இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்தாண்டு மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இதைத் தவிர, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி விவேக் ஜோஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என, நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே பட்டியலிடப்பட்டபடி, அந்த மனுக்களை இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.