நீதிமன்றங்கள் கலெக்ஷன் ஏஜென்டுகளாக மாறக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீதிமன்றங்கள் கலெக்ஷன் ஏஜென்டுகளாக மாறக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : செப் 23, 2025 11:49 PM

புதுடில்லி : 'பணத்தை வசூலித்து தரும் கலெக்ஷன் ஏஜென்டுகளாக நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடன் தொகையை திரும்ப பெறும் நடவடிக்கைக்காக, தனிநபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அச்சுறுத்தல் அப்போது, 'கடன் தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வ து சமீப காலங்களாக வழக்கமாகி வருகிறது' என, நீதிபதிகள் கண்டித்தனர்.
உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டதாவது:
இது போன்ற வழக்குகளில் கடன் பெற்றவர் மற்றும் கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு இடையே போலீசார் சிக்கித் தவிக்கின்றனர். வழக்கை பதிவு செய்யவில்லை எனில், ஏன் பதிவு செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.
ஒருவேளை வழக்குப்பதிவு செய்தால், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதா என நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இதனால், போலீசார் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கின்றனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
போலீசாருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இப்படிப்பட்ட வழக்குகளின்போது போலீசார் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒருவரை கைது செய்யும் முன், அது சிவில் வழக்கா அல்லது கிரிமினல் வழக்கா என்பதை சீர்துாக்கி பார்க்க வேண்டும். கிரிமினல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, நீதி பரிபாலனத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
அனுமதிக்க முடியாது நீதிமன்றங்கள், கடன் தொகைக்கான பணத்தை வசூலித்து தரும் கலெக்ஷன் ஏஜென்டுகளாக செயல்படக் கூடாது. நீதித் துறையில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஒரு வழக்கு, சிவிலா அல்லது கிரிமினலா என்பதை ஆராய, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதியை தீர்வு காணும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
அவரிடம் போலீசார் சென்று, தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். அதை வைத்து, போலீசார் வழக்கு பதிந்து நட வடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.