பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டம்: உத்தரவை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்
பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டம்: உத்தரவை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்
ADDED : அக் 19, 2024 12:44 AM
புதுடில்லி: பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டப்பிரிவு - 3 உட்பிரிவு - 2ன்படி, பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்யப்பட்டது.
இந்த சட்டத்தில், 2016ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தண்டனை காலம் ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. பினாமி சொத்தின் சந்தை மதிப்பில், 25 சதவீதம் வரை அபராதமாக விதிக்கதிருத்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, மேற்கு வங்கத்தின் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'கடந்த 2016ல் வந்த திருத்த சட்டத்தை, முந்தைய பரிவர்த்தனைகளுக்கு அமல்படுத்த முடியாது' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, 'பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தில், 2016ல் ஏற்படுத்திய பிரிவு -3 உட்பிரிவு -2, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது.
'மேலும் 5வது பிரிவையும் பின்னோக்கி அமல்படுத்த முடியாது. எனவே, 2016 அக்., 25க்கு முன் நடந்த பரிவர்த்தனைகளுக்கு குற்ற நடவடிக்கை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை, புதிய திருத்த சட்டத்தின்படி எடுக்க முடியாது' என, 2022 ஆக., 23ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
''பினாமி சொத்துகள் திருத்த சட்டப்பிரிவு - 3 உட்பிரிவு - 2 மற்றும் சட்டப்பிரிவு - 5ல் செய்யப்பட்ட திருத்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து முந்தைய அமர்வில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை,'' என வாதிட்டார்.
எனவே, இதை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதை தொடர்ந்து, 2022 ஆக., 23ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.