பெண் வழக்கறிஞர்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் முன்னாள் நீதிபதி கட்ஜூ
பெண் வழக்கறிஞர்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் முன்னாள் நீதிபதி கட்ஜூ
UPDATED : ஆக 22, 2025 09:45 PM
ADDED : ஆக 22, 2025 09:42 PM

புதுடில்லி: '' தான் நீதிபதியாக இருந்தபோது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினேன்,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் மன்னிப்பு கேட்டதுடன், அந்த பதிவை நீக்கிவிட்டார்.
கடந்த 2004 முதல் 2005 வரை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தவர் மார்கண்டேய கட்ஜூ. இவர், டில்லி ஐகோர்ட் நீதிபதியாகவும்பணியாற்றினார். பிறகு 2006 முதல் 2011 வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், 2011 முதல் 2014 இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களில் தொடர்ந்து 'ஆக்டிவ்' ஆக இருந்து வந்தார். அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவ்வபோது விமர்சனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், '' நான் நீதிபதியாக பணியாற்றிய போது என்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினேன்,'' என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், மார்க்கண்டேயே கட்ஜூவை கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் கருத்து பதிவிட்டனர். பெண் வழக்கறிஞர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நீதிபதியை பார்த்து பெண் வழக்கறிஞர்கள் கண்ணடிப்பதன் மூலம் சாதகமான தீர்ப்புகளை பெற முடியும் என்ற கட்ஜூவின் பெண் வெறுப்பு கருத்துக்களை கண்டிக்கிறோம். இத்தகைய கருத்துகள் வெறும் புண்படுத்தும் செயல் மட்டுமல்ல. சட்டத்துறையில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம், நம்பகத்த்மை, திறன், நேர்மை மற்றும் தொழில்முறை நிலைப்பாட்டின் மீதான தாக்குதல் ஆகும்.
அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும் பொறுப்பில் இருந்த முன்னாள் நீதிபதி, பெண் வழக்கறிஞர்களின் கடின உழைப்பையும், தகுதியையும் சாதாரண பாலின பாகுபாட்டின் மூலம் அற்பமாக கருதுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது வார்த்தைகள் பெண் வழக்கறிஞர்களை இழிவுபடுத்துவது மட்டும் அல்லாமல், நீதி அமைப்பின்பாரபட்சமற்ற தன்மை மீதான பொது மக்களின் நம்பிக்கையையும், சிதைக்கிறது. முன்னாள் நீதிபதியிடம் இருந்து வரும் இதுபோன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கட்ஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பாலின சமத்துவத்தையும் நமது நீதித்துறை நிறுவனங்களின் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இத்தகைய பிற்போக்குத்தனமான அணுகுமுறைகளை நிராகரித்து கண்டிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.
மன்னிப்பு கோரினார்
இதனையடுத்து, மார்கண்டேயே கட்ஜூ, பெண் வழக்கறிஞர்கள் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார். மேலும், நகைச்சுவைக்காக கூறியதாகவும், அதனைதற்போது நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்தார். எனினும், இதனை பெண் வழக்கறிஞர்கள் இதனால் காயப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்புகோருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.