தீர்ப்பு அளிக்கும் போது பிரசங்கம் வேண்டாம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
தீர்ப்பு அளிக்கும் போது பிரசங்கம் வேண்டாம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
UPDATED : ஆக 21, 2024 06:47 AM
ADDED : ஆக 21, 2024 02:48 AM

புதுடில்லி: பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுவித்ததுடன், பெண்களுக்கு அறிவுரை வழங்கி கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
மேற்கு வங்கத்தில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு
இதை எதிர்த்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஆண், முழு சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
'எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை பொருட்படுத்த தேவையில்லை' என, கூறி குற்றவாளியை கடந்த ஆண்டு அக்., 18ல் விடுவித்தது. அதோடு, பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியது. அதன் விபரம்:
இளம் பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்துக்காக தங்களையே இழக்க துணியும் பெண்கள், இந்த சமூகத்தின் பார்வையில் தவறானவர்களாக பார்க்கப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.