நியாயமாக இருக்க வேண்டும்: பேச்சு மீதான கட்டுப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து
நியாயமாக இருக்க வேண்டும்: பேச்சு மீதான கட்டுப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து
ADDED : மார் 28, 2025 02:57 PM

புதுடில்லி: '' பேச்சுகள் மீதான கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டுமே தவிர, கற்பனையானதாக இருக்கக்கூடாது,'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., இம்ரான் பிரதாப்கார்கி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட கவிதை தொடர்பாக அவர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸஅ ஓகா மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இம்ரான் கார்கி மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த நீதிபதிகள் தொடர்ந்து கூறியதாவது: பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முன்னணியில் இருக்க வேண்டும். பேச்சுகள் மீதான கட்டுப்பாடு நியாயமானதாக இருக்க வேண்டுமே தவிர, கற்பனையானதாக இருக்கக்கூடாது. அரசியலமைப்பு சட்டம் 19(1) ன் கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக சட்டப்பிரிவு 19(1) இருக்கக்கூடாது.
எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லாமல், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள கவுரவமான வாழ்க்கைக்கான உறுதிமொழியை தொடர முடியாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துகளை பதில் கருத்துக்கள் மூலம் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒடுக்குமுறை மூலம் அல்ல.
கவிஞர்கள், டிராமா, படங்கள், ஸ்டாண்ட் ஆப் காமெடி, நையாண்டி மற்றும் கலை உள்ளிட்ட இலக்கியங்கள், வாழ்க்கையை இன்னும் அர்த்தம் உள்ளதாக மாற்றுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.