sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு விசாரணை கிடையாது

/

லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு விசாரணை கிடையாது

லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு விசாரணை கிடையாது

லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு விசாரணை கிடையாது

5


UPDATED : அக் 04, 2024 11:34 PM

ADDED : அக் 04, 2024 11:32 PM

Google News

UPDATED : அக் 04, 2024 11:34 PM ADDED : அக் 04, 2024 11:32 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : திருமலை ஏழுமலையான் கோவிலின் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு பதிலாக, ஐந்து பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று அமைத்தது. சி.பி.ஐ., மற்றும் ஆந்திர போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அந்த குழுவில் நீதிமன்றம் நியமித்துள்ளது.

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 18ல் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனால், கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு பொய் குற்றச்சாட்டு கூறுவதாக ஜெகன் மோகன் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது மாநில அரசு. இது குறித்து விசாரிக்க, ஐந்து பேர் அடங்கிய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அரசு அமைத்தது.

இதற்கிடையே, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் 30ல் இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ஆந்திர அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது.

இந்த விவகாரத்தில் செப்., 25ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்., 26ல் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், செப்., 18ம் தேதியே முதல்வர் சந்திரபாபு இந்த விவகாரத்தை பொது வெளியில் பேசியுள்ளார்.

விசாரணை துவங்குவதற்கு முன், முதல்வர் பொது வெளியில் குற்றச்சாட்டை முன்வைப்பது முறையல்ல.இது கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.இப்படி காரசாரமான கருத்துக்களை தெரிவித்த நீதிமன்றம், விசாரணையை நேற்று தொடர்ந்தது.

இந்த வழக்கில், மாநில அரசு நியமித்த சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தனி அதிகாரம் பெற்ற அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமா என்பதில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுகிறார்.

நேற்றைய விசாரணை துவங்கியதும், துஷார் மேத்தா கூறியதாவது:

இந்த குற்றச்சாட்டில் துளியளவு உண்மை இருந்தால் கூட அதை ஒதுக்கிவிட முடியாது. தற்போது அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி.,யில் தகுதி வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மீது எனக்கு புகார் எதுவும் இல்லை.

மத்திய போலீஸ் படையில் இருந்து மூத்த அதிகாரியை நியமித்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிடலாம்.இவ்வாறு மேத்தா கூறினார்.

ஆந்திர அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''நீதிமன்றம் விரும்பும் அதிகாரிகளை எஸ்.ஐ.டி.,யில் இணைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை,'' என்றார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் பிறப்பித்த உத்தரவு:

ஜூலை 6 மற்றும் ஜூலை 12ல் சப்ளை செய்யப்பட்ட நெய்யை பரிசோதனை செய்ததில் அதில் கலப்படம் இருந்ததாகவும், அது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. லட்டு விவகாரத்தை அரசியல் நாடகமாக்கவும், நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக பயன்படுத்தவும் அனுமதிக்க மாட்டோம்.

எனினும், கோடிக்கணக்கான பக்தர்களின் புண்பட்ட உணர்வுகளை தணிக்க வேண்டியது அவசியம். எனவே, ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு பதிலாக வேறொரு குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம்.

அதில், இரண்டு சி.பி.ஐ., அதிகாரிகள், ஆந்திர போலீசில் இருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இடம் பெறுவர். இந்த குழு, சி.பி.ஐ., இயக்குனரின் கண்காணிப்பின் கீழ் செயல்படும்.

இந்த உத்தரவால், மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவின் நேர்மை குறித்து கேள்வி எழுப்புவதாக கருதக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்று திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானை தரிசித்தார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை மாநில அரசு சார்பில் காணிக்கையாக செலுத்தினார்.

'உத்தரவை வரவேற்கிறோம்'

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபிராம் கொம்மா ரெட்டி கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடியவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்பதே ஹிந்துக்களின் வேண்டுகோள். மாநில அரசின் நோக்கமும் அதுவே.



மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின் வாயிலாக சந்திரபாபுவின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவருக்கு உண்மையிலேயே கடவுள் பக்தி இருந்தால், திருமலை பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும்.








      Dinamalar
      Follow us