உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே தீரணும்; ரூ.20 ரூபாய் லஞ்ச வழக்கில் 34 ஆண்டுக்கு பிறகு வாரண்ட்
உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே தீரணும்; ரூ.20 ரூபாய் லஞ்ச வழக்கில் 34 ஆண்டுக்கு பிறகு வாரண்ட்
ADDED : செப் 06, 2024 08:25 AM

பாட்னா: பீஹாரில், 34 ஆண்டுக்கு முன், 20 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் போலீஸ்காரரை கைது செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு மே 6ம் தேதி பீஹாரில் உள்ள சஹர்சா ரயில் நிலையத்தில் போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங் பணியில் இருந்துள்ளார். பிளாட்பாரத்தில் கடை போடுபவர்களிடம் லஞ்சம் பறிப்பது இவரது வாடிக்கை. சீதாதேவி என்ற பெண், ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காய்கறி மூட்டைகளை தூக்கி சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த சுரேஷ் பிரசாத் சிங் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த பெண், புடவையில் முடிந்து வைத்திருந்த 20 ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார்.
ரூ.20 லஞ்சம்!
சுரேஷ் பிரசாத் அதை வாங்கி பாக்கெட்டில் வைத்தபோது, அப்போதைய மேனேஜர் ஒருவர் கையும் களவுமாக பிடித்துவிட்டார். லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் 34 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளை விசாரிக்க கோர்ட் நடவடிக்கை எடுக்கும்போது தான் இந்த வழக்கு, நீதிபதியின் கவனத்துக்கு வந்துள்ளது.
உத்தரவு
ஆவணங்களை பார்வையிட்ட சிறப்பு விஜிலென்ஸ் நீதிபதி சுதேஷ் ஸ்ரீவஸ்தவா, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதையும், அதனால் தான் வழக்கு தாமதம் ஆவதையும் கண்டறிந்தார். தலைமறைவான முன்னாள் போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை
'உப்பு தின்றவர்கள் தண்ணி குடிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும்' என்பதை உணர்த்துவதாக நீதிபதியின் உத்தரவு உள்ளது. இந்த வழக்கில் ஜாமின் பெற்ற சுரேஷ் பிரசாத் சிங், வழக்கில் இருந்து தப்பிக்க போலியான முகவரியும் கொடுத்திருக்கிறார் என்பது இப்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.