சுர்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக் மறைவு
சுர்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக் மறைவு
ADDED : பிப் 26, 2024 07:17 AM

பெங்களூரு: சுர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக், திடீர் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
யாத்கிர் மாவட்டம், சுர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக், 67. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்னை இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாச பாதையில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், முதல்வர் சித்தராமையா, மணிப்பால் மருத்துவமனைக்கு சென்று, ராஜா வெங்கடப்பா நாயக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1999ல் நடந்த சட்டசபை தேர்தலில், கர்நாடக காங்கிரஸ் சார்பில், சுர்பூர் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அதன்பின்னர், 2013, 2023 தேர்தல்களில், காங்கிரஸ் சார்பில் வென்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின், தீவிர ஆதரவாளர்.
தேர்தலில் வெற்றி பெற்றதும், அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. கடந்த மாதம் 26ம் தேதி, கர்நாடகா கிடங்கு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். பதவி ஏற்ற ஒரு மாதத்தில் உயிரிழந்து விட்டார்.
ராஜா வெங்கடப்பா நாயக் மறைவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4:00 மணிக்கு அரசு மரியாதையுடன், சுர்பூரில் நடக்கிறது.
ராஜா வெங்கடப்பா நாயக் மறைவால், சுர்பூர் தொகுதி காலியாகி உள்ளது. அந்த தொகுதிக்கு, லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படலாம்.

