டிஜிட்டல் சர்வேக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்; சர்வேயர் கைது
டிஜிட்டல் சர்வேக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்; சர்வேயர் கைது
ADDED : ஜன 01, 2025 01:18 AM

மூணாறு, : கேரளமாநிலம் மூணாறு அருகே பைசன்வாலி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பொட்டன்காடு பகுதியில் தனியார் ஏலத்தோட்டத்தை டிஜிட்டல் சர்வே நடத்துவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தற்காலிக சர்வேயரை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கைது செய்தனர்.
அப்பகுதியில் உள்ள 146 ஏக்கர் தனியார் ஏலத் தோட்டத்தை டிஜிட்டல் முறைபடி சர்வே நடத்துவதற்கு, தேவிகுளம் தாலுகா தற்காலிக சர்வேயர் நிதின் 34, ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை வழங்க இயலாது என தோட்ட உரிமையாளர் கூறியதால், ரூ.75 ஆயிரமாக குறைத்தார். அதில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு நிதின் கேட்டார்.
அது குறித்து தோட்ட உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி ரூ.50 ஆயிரம் வழங்க முன் வந்த உரிமையாளர் நேரியமங்கலம் பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை முன் நிதினை வர வழைத்தார். அங்கு அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை நிதின் வாங்கியபோது, இடுக்கி லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. ஷாஜூஜோசப் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர்.