எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும்: மத்திய அமைச்சர்
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும்: மத்திய அமைச்சர்
ADDED : ஜன 30, 2024 03:08 PM

புதுடில்லி: ‛‛ 146 எம்.பி.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும்'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
'பார்லிமென்ட் பாதுகாப்பு குளறுபடி சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தர வேண்டும்' என, வலியுறுத்தி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பலமுறை எச்சரித்தும் கேளாமல் ரகளையில் ஈடுபட்ட லோக்சபா எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் என, மொத்தம் 146 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
நாளை ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (ஜன.,30) நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: எம்.பி.,க்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக ராஜ்யசபா அவைத்தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகருடன் பேசியுள்ளேன். அவர்களிடம் மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த விவகாரம் அவைத்தலைவர் மற்றும் சபாநாயகர் அதிகார வரம்புக்கு உட்பட்டது. எனவே, சஸ்பெண்ட் ரத்து செய்வது குறித்து பார்லி., உரிமை மீறல் குழுவிடம் தகவல்களை பரிமாறும்படி, இருவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள், பார்லிமென்ட் திரும்ப வாய்ப்பு தர வேண்டும் எனவும் கோரினோம். இதனை இருவரும் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு பிரஹலாத் ஜோஷி கூறினார்.