அவதுாறு வழக்கில் மன்னிப்பு கேட்க எஸ்.வி.சேகருக்கு 4 வாரம் அவகாசம்
அவதுாறு வழக்கில் மன்னிப்பு கேட்க எஸ்.வி.சேகருக்கு 4 வாரம் அவகாசம்
ADDED : ஏப் 26, 2025 01:04 AM
புதுடில்லி:பெண் பத்திரிகையாளர்களை அவதுாறாக பேசிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, நடிகர் எஸ்.வி.சேகருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
பிரபல நடிகர் எஸ்.வி.சேகர்; தன் முகநுால் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி கொச்சையான முறையில் கருத்து பதிவிட்டார். இதுபற்றி, பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒருமாத சிறை
இதுதொடர்பாக, ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ''இந்த விவகாரத்தில், வேறு ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை, தன் முகநுால் பக்கத்தில் எஸ்.வி.சேகர் தவறுதலாக பகிர்ந்துள்ளார்; அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அந்த பதிவை நீக்கி விட்டார். மேலும், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுள்ளார்,''என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், நீங்கள் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. எந்த தவறும் செய்யவில்லை என்பதையே, மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.
'நீங்கள் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேசியது இழிவான ஒப்பீடு என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது கண்ணியத்தை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது. உங்களுக்கு நாங்கள் என்ன காரணத்திற்காக மன்னிப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர் தரப்பு வழக்கறிஞர், 'இதுவரை என் கட்சிக்காரர், இப்படி ஒரு தவறை செய்ததே கிடையாது.
'இனிமேல் எப்போதும் செய்ய மாட்டார். வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவும் தயார். சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை சந்தித்து, நேரில் மன்னிப்பு கேட்பதாக எஸ்.வி.சேகர் கூறியதை நாங்கள் ஏற்கிறோம். அதற்காக அவருக்கு நான்கு வாரம் அவகாசம் வழங்குகிறோம்.
'வழக்கின் விசாரணையை கோடை விடுமுறை முடிந்து, ஜூலை மாதம் ஒத்திவைக்கிறோம். அதுவரை எஸ்.வி.சேகர் சிறையில் சரணடைவதில் இருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட விலக்கை நீட்டிக்கிறோம்' என்று தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.

