ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு: பிபவ் குமாருக்கு 5 நாள் கோர்ட் காவல்
ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு: பிபவ் குமாருக்கு 5 நாள் கோர்ட் காவல்
ADDED : மே 24, 2024 08:20 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் 5 நாட்கள் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்திற்கு நேரில் சந்திக்க ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் அடித்து உதைத்து தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் பரபரப்பு கூறினார்.
இதனை ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மறுத்தார். எனினும் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து டில்லி போலீசார் பிபவ் குமார் மீது வழக்குப்பதிந்து கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.
வழக்கு டில்லி ஹசாரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று (24.05.2024) அவரை ஆஜர்படுத்திய போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். தன் மொபைல் போனில் பாஸ்வேர்டு வைத்துள்ளதால் அதனை ஆய்வு செய்ய முடியவில்லை எனவே 14 காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என கோரினர். இதனை மறுத்து நீதிபதி 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து மே.28-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.