ADDED : மார் 08, 2024 01:58 AM

பெங்களூரு: 'பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட வழக்கில் விசாரணை முடியும் வரை, ராஜ்யசபா உறுப்பினர் சையது நாசிர் உசேனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டாம்' என, துணை ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசின் சையது நாசிர் உசேன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள், பெங்களூரு விதான் சவுதாவில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக, ஹாவேரியை சேர்ந்த முகமது ஷபி, முனாவர், டில்லியின் இல்தாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு, கர்நாடக மாநில ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சையது நாசிர் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி கொண்டாட்டத்தின்போது, அவரது ஆதரவாளர்கள், பெங்களூரு விதான் சவுதாவில், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர்.
தடயவியல் அறிக்கையிலும், இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். எனவே, விசாரணை முடியும் வரை எக்காரணம் கொண்டும் சையது நாசிர் உசேனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த கடிதத்தை கர்நாடக பா.ஜ.,வினர் வரவேற்றுள்ளனர். இதற்கிடையில், 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட வழக்கில், சையது நாசிர் உசேனை, நான்காவது குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

