ADDED : டிச 16, 2024 12:19 AM

புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு, ரத்தக் கொதிப்பு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இதய பிரச்னைக்காக, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகிர் உசேன், 7 வயதில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்கு கிடைத்தது. இதைத் தவிர, சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.