தஹாவூர் ராணாவை 18 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
தஹாவூர் ராணாவை 18 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
UPDATED : ஏப் 11, 2025 06:16 PM
ADDED : ஏப் 11, 2025 02:48 AM

புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை சிறப்பு நீதிபதி முன் என்.ஐ,ஏ., போலீசார் ஆஜர்படுத்தினர்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -- இ - தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த அவர்கள், மும்பையின் முக்கியப் பகுதிகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
தொடர்ந்து, 60 மணி நேரம் நடந்த தாக்குதல்களில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு, மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி, 2009ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் பிறந்து, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்ற தஹாவூர் ராணா, இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா, 2011ல் இருந்து, அங்குள்ள சிறையில் இருந்தார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் 'ரா' எனப்படும் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு அதிகாரிகள், அமெரிக்காவுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் ஒப்படைத்தது. தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன் அவர், டில்லிக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.
அவரை டில்லியில் உள்ள திஹார் சிறையில், உயர் பாதுகாப்புள்ள வளாகத்தில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு என்.ஐ.ஏ., கோர்ட் சிறப்பு நீதிபதி முன் தஹாவூர் ராணாவை ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ.,போலீசார் 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி 18 நாள் அனுமதி அளித்தார். இதையடுத்து தஹாவூர் ராணாவிடம் என்.ஐ.ஏ.,போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கில் என்.ஐ.ஏ., சார்பில் ஆஜராவதற்காக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.