ADDED : பிப் 25, 2026 12:54 AM

டொரான்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகைக்கு முன்னதாக, மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 166 பேர் பலியாகினர். இந்த சதி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தானில் பிறந்த தஹாவூர் ராணா, 64, மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர், 1997ம் ஆண்டு வட அமெரிக்க நாடான கனடாவுக்கு குடி பெயர்ந்து, அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்.
மற்றொரு வழக்கில், ராணா, 2019ல் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, சிறையில் உள்ளார்.
இந்நிலையில், தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா கூறியுள்ளது. கடந்த, 2000ல் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது, பொய் தகவல்கள் கொடுத்ததால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக கனடா கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலத்தில், கனடா - இந்தியா இடையேயான உறவு மோசமடைந்தது. தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் வலுப்படுத்த விரும்புகிறார்.
நாளை அவர் இந்தியா வர உள்ள நிலையில், ராணாவின் கனடா குடியுரிமை ரத்து செய்வதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

