சிதம்பரம் மீது நடவடிக்கை எடுங்க: மணிப்பூர் காங்., தலைவர்கள் கொந்தளிப்பு
சிதம்பரம் மீது நடவடிக்கை எடுங்க: மணிப்பூர் காங்., தலைவர்கள் கொந்தளிப்பு
ADDED : நவ 21, 2024 10:37 PM

இம்பால்: மணிப்பூர் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரான சிதம்பரம் வெளியிட்ட சர்ச்சை பதிவுக்கு, அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக குக்கி மற்றும் மெய்ட்டி இனத்தவர்களிடையே பிரச்னை நடந்து வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு கூட மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து வன்முறை எல்லை மீறியதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் பற்றி மாஜி மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது.
சிதம்பரம் சமூக வலைதளத்தில், மணிப்பூரில் 5000 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்களை குவிப்பதால் எந்த விடையும் கிடைக்கப்போவது இல்லை. பிரச்சனைக்கு காரணம் முதல்வர் பைரேன் சிங்கை அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அதாவது குக்கி, மெய்ட்டி, நாகா உள்ளிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் ஒரே மாநிலத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கான பிராந்திய சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் பிரதமர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மணிப்பூருக்கு செல்ல வேண்டும். அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து பணிவுடன் பேச வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
சிதம்பரத்தின் இந்த பதிவு, மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதாவது குக்கி, மெய்ட்டி, நாகா இன மக்களுக்கான பிராந்திய சுயாட்சி வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தான் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள், மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் உள்பட 10 காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே மாநிலத்தில் குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பிராந்திய சுயாட்சி கேட்டு வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக நாங்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி சிதம்பரத்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.
மணிப்பூரில் வன்முறையான சூழல் நிலவி வரும் சூழலில் இந்த பதிவு கூடுதல் பதற்றத்தை தூண்டும். அதோடு மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக எப்போதுமே துணை நின்று வருகிறது.
ப.சிதம்பரத்தின் இந்த பதிவு அதற்கு எதிரானதாக உள்ளது. இதனால் அந்த பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கே சிதம்பரத்திடம் தொடர்பு கொண்டு பேசியவுடன் தற்போது அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூருக்கு எதிராக இதுபோன்ற கருத்தை தெரிவிக்க வேண்டாம் எனவும் சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.