ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது: ராகுல்
ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது: ராகுல்
UPDATED : நவ 26, 2024 04:30 PM
ADDED : நவ 26, 2024 04:22 PM

புதுடில்லி: '' நாட்டில் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்கள் பற்றி பேசினால் மைக்குகள் அணைக்கப்படுகிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் பார்லிமென்டில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இந்திய அரசியலமைப்பு பற்றி பிரதமர் மோடி படிக்கவில்லை என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன். அப்படி படித்து இருந்தால், அவர் தற்போது செய்வது எதையும் செய்ய மாட்டார். அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டும் அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான இந்தியாவின் சிந்தனை. அது உண்மை மற்றும் அகிம்சை பற்றியது.
டாக்டர் அம்பேத்கர், புத்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் சமூக அதிகாரம் பற்றிய சிந்தனைகள் அரசியலமைப்பில் உள்ளது. இதில் சாவர்க்கரின் குரல் எங்கு உள்ளது? வன்முறையை பயன்படுத்த வேண்டும் என இந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளதா? ஒருவரை தாக்க வேண்டும் அல்லது மிரட்ட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதா? பொய்களை பயன்படுத்தி அரசை இயக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளதா? இது உண்மை மற்றும் அகிம்சைக்கான புத்தகம்.
தெலுங்கானாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது வரலாற்று நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சி அமையும் மாநிலங்களில் இதனை நாங்கள் செய்வோம். நாட்டின் ஒட்டு மொத்த அமைப்புகளும் தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிராக உள்ளது. இவர்களுக்கு எதிராக ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
அப்போது ராகுல் பேசிக் கொண்டிருந்த மைக் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அணைக்கப்பட்டது. பிறகு அது சரி செய்யப்பட்டதும் ராகுல் தொடர்ந்து பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக, தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழைகள் பற்றி யாரேனும் பேசினால், அவர்களின் மைக்குகள் அணைக்கப்படுகின்றன. அப்படி அணைக்கப்படும் போது என்னை இருக்கையில் அமரும்படி ஏராளமானோர் கூறுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது. நான் அமர மாட்டேன். நான் தொடர்ந்து நிற்பேன். உங்கள் விருப்பப்படி மைக்கை அணைத்துக் கொள்ளுங்கள். நான் பேச வேண்டியதை பேசுவேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

