அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்காக பேச்சு நடக்கிறது! : அறிவிப்பு வரும் என்கிறார் அமித் ஷா
அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்காக பேச்சு நடக்கிறது! : அறிவிப்பு வரும் என்கிறார் அமித் ஷா
ADDED : மார் 30, 2025 03:08 AM

புதுடில்லி: ''அடுத்தாண்டு நடக்கவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடக்கிறது. இத குறித்து, சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில், சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க, எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார்.
கட்டாய வெற்றி
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பழனிசாமி, 2024ல் கூட்டணியை விட்டு வெளியேறிய பின் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்து வரும் பழனிசாமிக்கு, வரும் சட்டசபை தேர்தலில் கட்டாய வெற்றி இன்றியமையாதது.
அதனால், வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கும் அவர், விஜயின் த.வெ.க.,வுடன் பேச்சு நடத்தி சரி வராத நிலையில், பா.ஜ., பக்கம் திரும்பி உள்ளார். சமீபத்தில் டில்லி சென்ற பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது, 'தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால் மட்டுமே, தி.மு.க.,வை வீழ்த்த முடியும்' என்று சொன்ன அமித் ஷா, தன்னோடு தனிமையில் பேசிய 45 நிமிடங்களில், 40 நிமிட நேரத்தை கூட்டணி அமைய வேண்டியதன் அவசியத்தை பழனிசாமியிடம் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டணி அமைவதன் அவசியத்தை தானும் உணர்ந்திருப்பதாக கூறிய பழனிசாமி, கட்சியினருடன் கலந்து பேசி கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாகச் சொல்லி விட்டு சென்னை திரும்பினார்.
இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்து விட்டதாகவே கருதி, இரு கட்சித் தொண்டர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.
'தமிழக நலன்கள் குறித்தே மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன்' என பழனிசாமி திரும்பத் திரும்ப கூறினாலும், அதை நம்ப இரு கட்சித் தொண்டர்களும் தயாராக இல்லை. இந்த கூட்டணியை முறியடிக்க, இப்போதே தி.மு.க., கூட்டணியும், திட்டங்களை வகுக்கத் துவங்கி விட்டது.
தன்னை சந்தித்து விட்டு பழனிசாமி வெளியே சென்ற சில நிமிடங்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில், பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டார். அதில், 'வரும் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தனியார் 'டிவி' நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தென்மாநிலங்களில் தமிழகம் ஒரு காலத்தில் முற்போக்கான மாநிலமாக இருந்தது. ஆனால், தி.மு.க., அரசின் அரசியலால் தற்போது குழப்ப மான நிலையில் உள்ளது.
இது, மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தமிழக மக்கள், தி.மு.க.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கி எறிய தயாராகி விட்டனர். சமீபத்தில், தமிழகத்துக்கு பயணம் செய்த போது, மக்களின் இந்த மனநிலையை தெரிந்து கொண்டேன்.
லோக்சபா தொகுதி மறுவரையறையில், தமிழகத்துக்கான தொகுதிகள் குறையும் என்று கூறி, தி.மு.க., அரசியல் செய்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து, மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், இல்லாத ஒன்றை கூறி, மாயத் தோற்றத்தை உருவாக்க தி.மு.க., முயற்சிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழலில் ஊறித் திளைத்த தி.மு.க., திடீரென விழித்துக் கொண்டது போல நாடகம் ஆடுகிறது.
மக்கள் அதிருப்தி
தொகுதி மறுவரையறை அறிவிப்பு வெளியாகி, அது செயல்பாட்டுக்கு வந்தாலும், எந்த மாநிலத்துக்கும் அநீதி நடக்காது. 0.0001 சதவீதம் அளவுக்குக்கூட எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு வராது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் மகனும், அமைச்சருமான உதயநிதியை, முதல்வர் பதவியில் அமர்த்த விரும்புகிறார். வாரிசு அரசியல் என்பது அந்தக் கட்சிக்கே உரியது; இதற்காகவே நாடகங்கள் நடத்துகின்றனர்.
தி.மு.க., தமிழுக்காக எதையும் செய்யவில்லை. அதனால், அக்கட்சி தமிழ் விரோத கட்சி. தேசிய கல்விக் கொள்கை, ஆரம்ப கல்வியை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழ் விரோத தி.மு.க., இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மத்திய பல்கலைகள், கல்லுாரிகளில் சேருவதற்காக, 'கியூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது, 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், தி.மு.க.,வின் எதிர்ப்பால் தமிழில் நடத்த முடியவில்லை.
தி.மு.க.,வின் மோசமான அரசியலால், தமிழகம் குழப்பமான கட்டத்தில் உள்ளது. லஞ்சம், ஊழல், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக இளைஞர்கள், தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்; தொழில்களும் வெளியேறி வருகின்றன. தி.மு.க.,வுக்கு எதிரான எதிர்ப்பு அலை தீவிரமாக உள்ளது.
அதனால், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசை மக்கள் துாக்கி எறிவர். பா.ஜ., இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைவது நிச்சயம்.
தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுகள் நடந்து வருகின்றன. சரியான நேரத்தில், அது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.