பெங்களூரு தமிழர்களின் பாசத்தில் நெகிழ்ச்சி 'பிரியா விடை' தந்த தமிழக புத்தக வியாபாரிகள்
பெங்களூரு தமிழர்களின் பாசத்தில் நெகிழ்ச்சி 'பிரியா விடை' தந்த தமிழக புத்தக வியாபாரிகள்
ADDED : டிச 30, 2024 10:32 AM

பெங்களூரில், பத்து நாட்கள் நடந்த 3 வது தமிழ் புத்தக திருவிழாவில், புத்தக வியாபாரிகள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், விழாவுக்கு வருகை தந்தோர் என அனைவரும் ஒரே குடும்பமாக இருந்தனர்.
திருவிழா நிறைவு பெற்ற போது, அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர். தமிழகத்தில் இருந்து வந்த புத்தக வியாபாரிகள், பெங்களூரு தமிழ் மக்கள் தமிழுக்கும், தமிழ் புத்தகங்களுக்கும் கொடுக்கும் மரியாதையை பார்த்து அசந்து போயினர்.
தீவிர வாசகர்கள் பலர், துண்டுச்சீட்டில் புத்தகங்களின் பெயரை குறித்து வைத்துக் கொண்டு புத்தகங்களை பை நிறைய அள்ளி சென்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சு போட்டி, நடன போட்டி, கவிதை போட்டி, வினாடி வினா என அனைத்தும் தமிழை மையப்படுத்தியே இருந்தது மிக சிறப்பு.
'புத்தக திருவிழா' என்பது பெயரளவில் மட்டுமில்லாமல், அரங்கமே திருவிழா கோலமாக காட்சி அளித்தது.
தமிழகத்தில் இருந்த வந்த புத்தக வியாபாரிகள் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:
வியாபார நோக்கத்திற்காக தான் இங்கு வந்தோம். ஆனால், பெங்களூரு தமிழ் மக்கள், தமிழுக்கு தரும் மரியாதையை பார்த்து மெய் சிலிர்த்தோம். அவர்கள் மீது எங்களின் அன்பு அதிகரித்தது.
இந்த பத்து நாட்களும் வேறு மாநிலத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே வரவில்லை. 'தமிழகத்தில் உள்ளோம்'என்ற நினைப்பே இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தோம். ஊருக்கு போவதை நினைத்தால் தான் சற்று வருத்தம் தான். இன்னும் ஒரு இரண்டு நாள் நடந்திருக்கலாமோ என்று நினைத்தோம். அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
நிறைவு நாள் கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற, மாணவ, மாணவியர், பொது மக்களின் கருத்துகளை பார்க்கலாம்.
* மாஸ்டர்
நடனம் எனக்கு உயிர் மூச்சு, நினைவு தெரிந்த நாளில் இருந்தே நடனம் ஆடி வருகிறேன். எனது அப்பாவை பார்த்து தான், கற்க துவங்கினேன். தற்போது பலருக்கும் நடனப்பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடன வகுப்பு நடத்தி வருகிறேன்.
அரவிந்த், டான்ஸ் மாஸ்டர்,
பில்லண்ணா கார்டன்
* பயமில்லை
கடந்த ஓராண்டாக பரத நாட்டிய பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு மூன்றாவது மேடை என்பதால் பயம் இல்லாமல் ஆடினேன். தமிழ் மக்கள் முன் ஆடியது சந்தோஷமாக இருந்தது. தமிழ் படிக்க, எழுத தெரியாது; ஆங்கில புத்தகங்களை படித்து வருகிறேன். எனது நடன குரு சாரிகா.
சாண்ட்ரியா,
4 ம் வகுப்பு,
புனித ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி
லிங்கராஜபுரம்
* நன்று
நிறைய மேடைகளில் ஆடி, எனது திறமையை வெளிப்படுத்தி உள்ளேன். மற்ற மேடைகளில் ஆடியதை விட, இங்கு நடனம் ஆடியது நன்றாக இருந்தது. படிப்பு, நடனம் இரண்டிலும் எனக்கு ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் சிறந்த டான்சராக வர விருப்பம். தமிழ் புத்தகங்கள் நிறைய படிப்பேன்.
பிரின்சி,
7 ம் வகுப்பு,
புனித அல்போன்சஸ் அகாடமி
* மைக்கில் ஜாக்சன்
எனது தந்தை, வீட்டில் ஆடுவதை பார்த்து, எனக்கு நடனம் கற்றுக் கொள்ள ஆசை வந்தது. ஆறு மாசமாக கற்று வருகிறேன். நிறைய மேடைகளில் ஆடுவதற்கு தயாராகி வருகிறேன். எனக்கு பிடித்த டான்சர் மைக்கேல் ஜாக்சன், அவர் போலவும் ஆட முயற்சி செய்து வருகிறேன்.
தீன தயாளன், 16
கோவிந்தப்பூர்
* மகிழ்ச்சி
கண்காட்சியில் தமிழ் புத்தகங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகளுக்கு தமிழ் கற்று கொடுக்கிறேன். தினமும் அரைமணி நேரம் புத்தகம் படித்து வருகிறேன். புத்தக வாசிப்பில் எனக்கு வழிகாட்டியாக இருப்பது, எனது கணவரே. புத்தக திருவிழா சிறப்பாக உள்ளது.
சாந்தி,
குடும்பத்தலைவி,
கல்யாண் நகர்
* தமிழ் ஆர்வம்
புத்தக திருவிழாவில் வயதானவர்களுக்கு, 'லிப்ட்' வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜெயகாந்தன் நாவல்களை விரும்பி படிப்பேன். தேடி வந்த புத்தகம் கிடைக்காததால், சற்று மன வருத்தமாக உள்ளது. புத்தகம் கூட எழுதி உள்ளேன். கடந்த ஆறு ஆண்டாக பத்துப்பாட்டு, நற்றிணை, குற்றால குறவஞ்சி கற்பதற்கு சிறப்பு வகுப்புக்கு செல்கிறேன்.
சுந்தரவதனன், 83,
ஹலசூரு
* பாரம்பரியம்
ஐந்து ஆண்டாக சிலம்பம் கற்று வருகிறேன். தமிழர்கள் முன்னிலையில் நமது பாரம்பரியமான சிலம்பம் சுற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தில் சிலம்பம் கற்று கொடுக்கும் குருவாக ஆசைப்படுகிறேன். எனது தந்தைக்காக, சிலம்பம் கற்றுக் கொண்டேன். தமிழ் படிக்க ஆசை உள்ளது; போதுமான நேரம் இல்லை.
ஹர்ஷதா,
மைக்ரோ பயாலஜி முதலாம் ஆண்டு மாணவி,
புனித வளனார் பல்கலைக்கழகம்.

