நிறுவனத்தில் 50 லேப்டாப்கள் திருடிய தமிழக ஊழியர் கைது
நிறுவனத்தில் 50 லேப்டாப்கள் திருடிய தமிழக ஊழியர் கைது
ADDED : செப் 19, 2024 02:16 AM
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர், தான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 லேப்டாப்களை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஓசூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் முருகேஷ், 29. இவர், கர்நாடகாவின் பெங்களூரின் ஒயிட்பீல்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சரக்கு இருப்பு பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி முன்னறிவிப்பு இன்றி திடீரென வேலைக்கு வருவதை அவர் நிறுத்திக்கொண்டார். அப்போது நிறுவனத்தில் உள்ள லேப்டாப்களை சோதனையிட்டபோது சில மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், லேப்டாப்களை முருகேஷ் திருடியது தெரியவந்தது.
இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஓசூரில் முருகேஷை போலீசார் கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் இருந்து ஐந்து லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், நிறுவனத்தில் இருந்து 50 லேப்டாப்களை திருடி ஓசூரில் உள்ள கம்ப்யூட்டர் ரிப்பேர் கடையில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததில் நஷ்டம் ஏற்பட்டதால், அதை சமாளிக்க, தான் வேலை செய்த நிறுவனத்தில் லேப்டாப்களை திருடி விற்றதை முருகேஷ் ஒப்புக்கொண்டார்.