தமிழக மீனவர்கள் கைது; வலுவான நிலைப்பாடு தேவை: மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்
தமிழக மீனவர்கள் கைது; வலுவான நிலைப்பாடு தேவை: மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்
UPDATED : செப் 28, 2024 08:45 PM
ADDED : செப் 28, 2024 07:59 PM

புதுடில்லி: தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ராகுல், எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:செப்டம்பர் 21ம் தேதி இலங்கை கடற்படையினர், 37 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஆகவே, அவர்களையும், அவர்களுடைய படகுகளையும், உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது, பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அநீதியானது. மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும், விரைவான ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த விஷயத்தில், மத்திய அரசு, ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நமது மீனவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, மிகவும் முக்கியமானது.
இவ்வாறு ராகுல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.