ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி
ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி
UPDATED : மே 15, 2025 06:43 AM
ADDED : மே 15, 2025 12:32 AM

ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் மட்டும் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
ஆகம விதிகளுக்கு எதிராக கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமனம் செய்ய தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இடைக்கால தடை
முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை, தகுதி அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற அரசின் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிராக, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை, எந்தவித மாற்றமும் ஆகம கோவில்களில் அர்ச்சகர் பணி நியமனத்தில் செய்யக்கூடாது என, கடந்த 2023ல் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடையை நீக்க கோரி, தமிழக அரசு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன், வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், 'தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நியமனத்துக்கு விதித்த இடைக்கால தடைகளை நீக்க வேண்டும்.
'உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கினால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுவர்' என உறுதி அளித்தனர். மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அர்ச்சகர்களை நியமிக்கும் விவகாரத்தில், ஏற்கனவே ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது.
'அதன் பரிந்துரை என்ற பெயரில், தகுதி இல்லாத நபர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதால் தான் இந்த குழப்பமே ஏற்பட்டது. எனவே, பழைய கமிட்டியை கலைத்துவிட்டு புதிதாக ஒரு கமிட்டியை அமைத்து, நியமனங்களை செய்யலாம்' என யோசனை கூறினர்.
சிவாச்சாரியார்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் ஆஜராகி,''கடந்த 1972 மற்றும் 2016ம் ஆண்டுகளில், ஆகம கோவில்களில் ஆகமத்திற்கு விரோதமாக பணி நியமனம் செய்யக்கூடாது என தீர்ப்பு உள்ளதால், இந்த தடையை நீக்க கோரும் மனுக்களை நிராகரிக்க வேண்டும்,'' என்றார்.
ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 'வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எத்தனை? உட்படாத கோவில்கள் எத்தனை என்று தமிழக அரசு கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'குறிப்பாக, ராமேஸ்வரம் கோவிலில் காலியாக இருக்கும் அர்ச்சகர் மற்றும் மணியம் பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களுக்கு அர்ச்சகர் மற்றும் மணியம் ஆகியோரை அரசு நியமிக்கலாம்' என உத்தரவிட்டனர்.
மேலும், ஆகம கோவிலை கண்டறிய ஏற்படுத்தும் குழுவில் சத்தியவேல் முருகன் இடம் பெறக்கூடாது என்ற அர்ச்சகர்கள் தரப்பு வாதத்தையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்
-- டில்லி சிறப்பு நிருபர் -.