கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு; உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்
கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு; உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்
ADDED : பிப் 13, 2025 01:13 AM

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், இருதரப்பும் பதில் அளிக்க, 12 கேள்விகளை எழுப்பியுள்ளது.
கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அப்போது அனைத்து தரப்பும் ஒரு வார காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான, 12 கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
அதன் விபரம்:
1. சட்டசபை நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாவை கவர்னர் மீண்டும் அரசுக்கு அனுப்பி வைத்தால், அதில் திருத்தங்கள் செய்தோ அல்லது செய்யாமலோ மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும்போது, அதை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா? ஆம் எனில் அதற்கான அதிகாரங்கள் என்ன?
2. குறிப்பிட்ட மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க முடியுமா அல்லது அனைத்து மசோதாக்களையும் அனுப்பி வைக்க முடியுமா?
3. கவர்னருக்கு என்று இருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன?
4. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு தான் கவர்னர் நடக்க வேண்டுமா அல்லது அதற்கு மாறாக நடந்து கொள்ள முடியுமா?
5. சட்டசபை அனுப்பும் மசோதாவை கவர்னர் நிறுத்தி வைக்கிறார் எனில் அதே மசோதாவை சபை மீண்டும் நிறைவேற்றி கவர்னரிடம் சமர்ப்பித்தால் அந்த மசோதாவை அவர் என்ன செய்வார்?
6. அரசியல் சாசனப் பிரிவு 200ன் கீழ், மசோதாக்களின் மீது கவர்னர் முடிவெடுக்க ஏதேனும் கால வரம்பு இருக்கிறதா?
7. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தால் மசோதாவுக்கான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா?
8. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், மசோதாக்கள் மீது நான்கு விதங்களாக முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா?
9. மசோதாக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு கவர்னருக்கு என்று என்னென்ன அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
10. சட்டசபை நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்போது, மத்திய அரசால் பரிந்துரைகள் வழங்கப்பட்டு மசோதா நிராகரிக்கப்பட்டால், அதை அரசியல் சாசனத்தின் எந்த விதி கையாள்கிறது?
11. கவர்னர் அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பும் ஜனாதிபதி அதன் மீது சட்டசபை முடிவெடுக்க அறிவுறுத்தல் கொடுக்கிறார். பிறகு மீண்டும் சட்டசபை கவர்னரிடம் மசோதாவை கொடுக்கிறது. இப்போது அந்த மசோதாவை கவர்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா, முடியாதா?
12. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், கவர்னர் தன் விருப்பத்தின் படி எந்த அளவிற்கு செயல்பட முடியும்?
இவ்வாறு 12 கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு தமிழக அரசும், கவர்னர் தரப்பும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க உள்ளது.
-டில்லி சிறப்பு நிருபர் -