ஜனாதிபதி கடிதத்தை திருப்பி அனுப்புங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
ஜனாதிபதி கடிதத்தை திருப்பி அனுப்புங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
ADDED : ஜூலை 28, 2025 11:16 PM

'மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது சரியானதுதான்; எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
ஒப்புதல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று மாதம் வரை கால வரம்பை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு, 14 கேள்விகளை எழுப்பி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை தனி மனுவாக விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. பின் இந்த மனுவை விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வும் அமைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கடந்த வாரம் விசாரணை நடத்திய அரசியல்சாசன அமர்வு, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அளித்தது.
அ தன்படி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் ம னு தாக்கல் செய்துள்ள து.
அதன் விபரம்:
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது. ஜனாதிபதி எழுப்பிய, 14 கேள்விகளில், 11 கேள்விகளுக்கு அந்த தீர்ப்பிலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஜனாதிபதியின் கடிதத்தை அவருக்கு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.
மேலும் , உச்ச நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் முடிவெடுத்து தீர்ப்பு வழங்கிய பின், அதில் சந்தேகம் இருக்கிறது என யாரும் கேட்க முடியாது.
ஒரு சட்டம் தொடர்பான விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் எந்த முடிவும் செய்யாத போது தான் ஜனாதிபதி கேள்வி எழுப்ப முடியும்.
மீண்டும் விசாரணை எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு எதையும் தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டது என்று தான் பொருள்.
எனவே, ஜனாதிபதியின் கடிதத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தை மீண்டும் முழு மறு விசாரணைக்கு உட்படுத்துவது என்பது நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசும் பதில் மனு தாக்கல் செய்தது.
டில்லி சிறப்பு நிருபர் -