மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காத தமிழக அமைச்சர்கள்: சிவராஜ் சிங் சவுகான் புகார்
மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காத தமிழக அமைச்சர்கள்: சிவராஜ் சிங் சவுகான் புகார்
ADDED : மார் 11, 2025 04:39 PM

புதுடில்லி: '' விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பங்கேற்கவில்லை,'' என பார்லிமென்டில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
இது தொடர்பாக லோக்சபாவில் அமைச்சர் பேசியதாவது: விவசாயத்துறை சார்பாகவும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இரண்டு முறை தமிழகம் சென்றுள்ளேன். தற்போது நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. ஆனால்,அநு்த இரண்டு கூட்டங்களிலும் தமிழக ஊரக வளர்ச்சி அல்லது விவசாயத்துறை அமைச்சர் யாரும் பங்கேற்கவில்லை.
திட்டங்களை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாங்கள் தமிழக மக்களையும், கலாசாரத்தையும், மொழியையும் மதிக்கிறோம். நாம் அனைவரும் அன்னை இந்தியாவின் மகன்கள். வேறுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பணிவுடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை கண்டனம்
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இன்று பார்லிமென்டில் தி.மு.க., அரசின் மக்கள் விரோத அணுகுமுறையை அம்பலப்படுத்தினார். பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி.,க்கள் புகார் அளித்த நிலையில், மத்திய அமைச்சர் தமிழகம் வந்த போது நடந்த முக்கிய கூட்டங்களில், மாநிலத்தில் உள்ள தி.மு.க., அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.