ADDED : செப் 23, 2024 01:49 AM

புதுடில்லி:இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஐ.ஏ., வெளியிட்ட 'மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2024'க்கான தரவரிசைப் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகியவை செயல்திறன் மிக்கவைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து எப்.எஸ்.எஸ்.ஏ-.ஐ., அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
'மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2024'ல் செயல்திறன் மிகுந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் இடத்தில் கேரளாவும், அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு மற்றும் ஜம்மு - காஷ்மீரும் உள்ளன.
கடந்த 2024ம் நிதியாண்டில், 100 சதவீதத்துக்கும் அதிகமான ஆய்வு இலக்கை கேரள மாநிலம் எட்டியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையில் முழுநேர உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தமிழகம் நியமித்துள்ளது. மேலும், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான ஆலோசனை குழுக்களை அமைத்து, திட்டமிட்டபடி ஆலோசனை கூட்டங்களை தமிழகம் நடத்தியுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.