'தமிழகம், புதுச்சேரியில் நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்'
'தமிழகம், புதுச்சேரியில் நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்'
UPDATED : நவ 02, 2024 06:51 AM
ADDED : நவ 02, 2024 04:41 AM

புதுடில்லி: 'தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில், வடகிழக்கு பருவமழை, நவம்பரில் இயல்பை விட அதிகமாக பெய்யக் கூடும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டில்லியில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அக்டோபர் மாதத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலை, 26.92 டிகிரி செல்ஷியசாக பதிவாகி உள்ளது. இது, 1901க்கு பின் அதிகபட்ச வெப்பநிலை. 1901ல், 25.69 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதே, இதற்கு முன் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்கு திசை காற்றின் வருகை போன்றவற்றால், அக்டோபரில் வெப்பநிலை அதிகமாக பதிவாகி உள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு, வடமேற்கு சமவெளிகளில் வெப்பநிலை இயல்பை விட, 2- - 5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் தெற்கு பகுதியில் உள்ள உள் மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை நவம்பரில் இயல்பை விட அதிகமாக பெய்யக் கூடும்.
நவ., மாதத்தை வானிலை ஆய்வு மையம் குளிர் கால மாதமாகக் கருதவில்லை. ஜன., - பிப்., ஆகியவை குளிர் கால மாதங்கள். குளிர் காலநிலையின் தகவல்கள் டிசம்பரில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.