ADDED : பிப் 12, 2024 06:54 AM
பெங்களூரு: 'பிரஸ்டிஜ் டிராங்கிலிட்டி' அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் பாரம்பரிய விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
பெங்களூரு பூதிகெரேயில் பிரஸ்டிஜ் டிராங்கிலிட்டி என்ற, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு வசிக்கும் தமிழர்கள் ஆண்டுதோறும், தமிழ் பாரம்பரிய விழா கொண்டாடுகின்றனர். நேற்று 5வது ஆண்டு பாரம்பரிய விழாவை, கோலாகலமாக கொண்டாடினர். விழா தொடக்கத்தில், பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து உறி அடித்தல், மயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் நடந்தது. பின்னர் தாரை தப்பட்டை அடித்து, தமிழ் குடும்பத்தினர் உற்சாகமாக நடனம் ஆடினர்.
அதன்பின்னர் நடந்த கலைநிகழ்ச்சியில், சிறுவர், சிறுமியர் பங்கேற்று நடனம் ஆடினர். தமிழ் தொன்மை வார்த்தை பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.
விழா ஏற்பாடுகளை டிரஸ்டிகள் ராஜா, பிரபு, சவுமியா, கோபி, சந்தோஷ், சுவாமி, சுரேஷ், பாண்டி, புவனா செய்திருந்தனர்.