ADDED : மார் 20, 2024 01:11 AM
திருச்சூர், கேரளாவில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில், காய்கறி ஏற்றிச் சென்ற, தமிழகத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தின் ஈரோடு பகுதியை சேர்ந்த டிரைவர் மோகன் குமார், 27, என்பவர், மினி லாரியில் காய்கறியை ஏற்றி, கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்றார். திருச்சூர் அருகே பட்டிக்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, லாரி டயர் பஞ்சர் ஆனது.
இதனால், மற்றொரு மினி லாரியை நிறுத்தி, அதன் டிரைவர் உதவியுடன் டயரை மாற்றிக்கொண்டிருந்தார். அடுத்தடுத்து மினி லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீது, அந்த வழியில் வந்த மற்றொரு லாரி மோதியது.
இதில் டிரைவர் மோகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு உதவிய மற்றொரு மினி லாரி டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

