ஒயிட்பீல்டில் பொங்கல் விழா குடும்பமாக கூடி மகிழ்ந்த தமிழர்கள்
ஒயிட்பீல்டில் பொங்கல் விழா குடும்பமாக கூடி மகிழ்ந்த தமிழர்கள்
ADDED : பிப் 09, 2024 07:47 AM

ஒயிட்பீல்டு: பெங்களூரு ஒயிட்பீல்டு பிரெஸ்ட்டிஜ் சாந்திநிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில், ஏராளமான தமிழர்கள் குடும்பம், குடும்பமாக கூடி பொங்கல் விழா கொண்டாடினர்.
தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகையை, கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் மறந்து விட்டதாக கருதப்பட்டது.
ஆனால், பெங்களூரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் விமரிசையாக கொண்டாடி வருவது சிறப்பு.
இந்த வகையில், நகரின் ஒயிட்பீல்டு பிரெஸ்ட்டிஜ் சாந்திநிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் 'வணக்கம் தமிழா' பொங்கல் கொண்டாட்டம், சமீபத்தில் விமரிசையாக நடத்தினர்.
இந்த திருவிழாவை, ஒன்பது ஆண்டுகளாக கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு துாங்கா நகரம் மதுரை நகரை போற்றும் விதமாக மதுரையை கருப்பொருளாக கொண்டு பாடல், நடனம், கண்ணகி நடன நாடகம் நடத்தப்பட்டன.
இயற்கையை போற்றவும், உழவர் பெருமக்களை கொண்டாடவும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்தினர்.
பொங்கலோ பொங்கல் என்று ஆடி, பாடி, கூடி மகிழ்ந்தனர். விழாவை, சுபாஷிணி என்பவர் ஒருங்கிணைத்திருந்தார்.

