தொட்டியாறு நீர் மின் நிலைய திட்டம்; வாளரா நீர்வீழ்ச்சி மாயமாக வாய்ப்பு
தொட்டியாறு நீர் மின் நிலைய திட்டம்; வாளரா நீர்வீழ்ச்சி மாயமாக வாய்ப்பு
ADDED : அக் 21, 2024 12:52 AM

மூணாறு: கேரள மாநிலம் அடிமாலி அருகே தொட்டியாறு நீர்மின் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், வாளரா நீர் வீழ்ச்சி மாயமாக வாய்ப்புள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே தேவியாற்றில் உருவாகும் 'வாளரா' நீர் வீழ்ச்சி மிகவும் பிரசித்து பெற்றது.
ரம்மியமான சூழலில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சிக்கு அருகில் செல்ல இயலாது என்றபோதும் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் இருந்து ரசிக்கலாம். அதுபோன்று மூணாறுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கானோர் தினமும் நீர்வீழ்ச்சியை ரசித்து வருகின்றனர்.
ஆண்டில் எட்டு மாதம் நீர் வரத்து அதிகம் காணப்படும். கடுமையான கோடையில் மட்டும் வறண்டு விடும்.
இந்நிலையில் அடிமாலி அருகே தொட்டியாறு நீர்மின் நிலையம் திட்டத்திற்கு நீண்டபாறைப் பகுதியில் மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதற்கு தேவியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பணிகள் பூர்த்தியானதால் அக்.,28ல் கேரள முதல்வர் பினராயிவிஜயன் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
அதற்கு முன்னோடியாக கடந்த வாரம் தேவியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நீர் மின் நிலையம் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது.
அப்போது வாளரா நீர் வீழ்ச்சி வறண்டு விட்டது. அத்திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில் சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள வாளரா நீர்வீழ்ச்சி மாயமாக வாய்ப்புள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

