ADDED : ஏப் 26, 2025 01:19 AM

புதுடில்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது.
இதன் முடிவில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்றம். அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. எனவே அதனை சட்டவிரோதம் என கூறுவது சரியாக இருக்காது' என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.