ADDED : ஜன 23, 2025 12:30 AM

புதுடில்லி:'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், கார்கள், சரக்கு வாகனங்கள் என 30க்கும் அதிகமான வாகனங்களை காட்சிப்படுத்தியது.
இதில், 'அவின்யா' மின்சார முன்மாதிரி எஸ்.யூ.வி., 'சியரா' எஸ்.யூ.வி., மற்றும் 'ஹாரியர்' எஸ்.யூ.வி., ஆகிய மின்சார கார்களை காட்சிப்படுத்தியது. குறிப்பாக, 85 சதவீதம் எத்தனால் எரிவாயுவில் இயங்கும் பஞ்ச் காரையும் காட்சிப்படுத்தியது.
அவின்யா: இது, டாடா நிறுவனத்தின் முதல் சொகுசு மின்சார் கார் ஆகும். 2023 வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட அவின்யா காரை ஒப்பிடுகையில், இந்த காரின் தோற்றம் எஸ்.யூ.வி., காரை போன்று மாறி உள்ளது.
கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 24,000 கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது.
சியரா: வாகன கண்காட்சியில் முன்மாதிரி காராக 2023ல் இது அறிமுகமானது. ஆனால், இம்முறை உற்பத்திக்கு நிகரான காரை காட்சிப்படுத்தியதாக டாடா நிறுவனம் கூறுகிறது. அதே சமயம், 90களில் வந்த சியரா காரும் காட்சிப்படுத்தப்பட்டது.
இரு கார்களையும் ஒப்பிடுகையில், முக்கிய டிசைன் ஒற்றுமைகள் தென்படுகின்றன. இந்த கார், நடப்பாண்டின் முதல் பாதியில், மின்சார வகையில் வர இருக்கிறது. ஆண்டு இறுதியில், பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வர உள்ளது.
ஹாரியர் இ.வி.,: இந்த கார், உற்பத்தி நிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பதை தனித்துவப்படுத்த, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இதில் உள்ளன.
இது, டாடாவின் இரண்டாம் தலைமுறை இ.வி., கட்டுமான தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் அமைப்பிற்காக, காரின் இரு ஆக்சில்களிலும் ஒரு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இந்த காரின் விலை அறிவிக்கப்படும்.

