விமான விபத்தில் உயிரிழந்தோர் நினைவாக அறக்கட்டளை: டாடா நிறுவனம்
விமான விபத்தில் உயிரிழந்தோர் நினைவாக அறக்கட்டளை: டாடா நிறுவனம்
UPDATED : ஜூலை 18, 2025 10:44 PM
ADDED : ஜூலை 18, 2025 10:31 PM

புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அறக்கட்டளை ஒன்றை , டாடா நிறுவனம் துவக்கி உள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், அதற்கு விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தவிபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஏர் இந்தியாவை நிர்வகிக்கும் டாடா நிறுவனம் புதிய அறக்கட்டளை ஒன்றை துவக்கி உள்ளது. இதற்கு ,'The Al-171 Memorial and Welfare Trust' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது
இது தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மும்பையில் அறக்கட்டளை துவக்குவதற்கான பணிகளை டாடா நிறுவனம் முறைப்படி நிறைவு செய்துவிட்டது. ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த அறக்கட்டளைக்கு ' The AI--171 Memorial and welfare Trust' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையானது, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ளவர்கள், காயமடைந்தவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும். விபத்துக்கு பிறகு உதவி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரண வல்லுநர்கள், சமூக பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கும் உதவி செய்யப்படும்.
இதற்காக டாடா நிறுவனம் மற்றும் டாடா அறக்கட்டளை தலா ரூ.250 கோடி என மொத்தம் ரூ.500 கோடி பங்களிப்பு அளித்துள்ளன. இந்த அறக்கட்டளையை 5 உறுப்பினர்கள் கொண்ட வாரியம் நிர்வகிக்கும். முதற்கட்டமாக பத்மநாபன் மற்றும் சித்தார்த் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் மற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.