ADDED : நவ 11, 2024 05:17 AM

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றிய டாக்சி டிரைவர், அவரை கடத்தினார். புத்திசாலித்தனமாக அப்பெண், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் மீட்கப்பட்டார்.
பெங்களூரை சேர்ந்த நிகிதா மாலிக், 30. கெம்பே கவுடா விமான நிலையத்தில் உள்ள, 'பிக் - அப்' பகுதியில், இம்மாதம் 8ம் தேதி இரவு 10:30 மணிக்கு, ஓலா டாக்சி புக் செய்து காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த நபர், ஓலா டாக்சி டிரைவர் என்றும், தன் பெயர் பசவராஜ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரது டாக்சியில் ஏறிய நிகிதாவிடம், ஓ.டி.பி., நம்பரை டிரைவர் கேட்காமல் இருந்ததால் அவர் சந்தேகம் அடைந்தார்.
மேலும், பதிவின் போது கூறப்பட்டிருந்த தொகையை விட அதிகமாக டிரைவர் கேட்டுள்ளார். இதற்கு நிகிதா மறுத்துள்ளார்.
மேலும் வேறு வாகனத்திற்கு, நிகிதாவை மாற்றுவதற்கும் டிரைவர் முற்பட்டுள்ளார். பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி, 500 ரூபாய் தருமாறு கேட்டு உள்ளார்.
நிலைமை மோசமானதை உணர்ந்த நிகிதா, புத்திசாலித்தனமாக, 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தனது குடும்பத்தினரிடமும் தனது இருப்பிடத்தை தெரியப்படுத்தி உள்ளார்.
அங்கு 20 நிமிடங்களில் வந்த போலீசார், ஆள்மாறாட்டம் செய்த டிரைவரை கைது செய்தனர். நிகிதா மீட்கப்பட்டார்.
இது குறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிகிதா, 'அன்று நான், 112க்கு டயல் செய்யவில்லை என்றால், இன்று நான் இந்த பதிவை செய்திருக்க உயிரோடு இருந்திருக்க மாட்டேன்' என, தெரிவித்துள்ளார்.
போலி டிரைவர் பசவராஜ் மற்றும் கார்.