வடமாநில குற்றவாளிகள் பதுங்கும் இடமான தேயிலை எஸ்டேட்டுகள்
வடமாநில குற்றவாளிகள் பதுங்கும் இடமான தேயிலை எஸ்டேட்டுகள்
ADDED : நவ 14, 2025 01:46 AM
மூணாறு: மூணாறு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள் வட மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகள் பதுங்கும் இடமாக மாறி வருகிறது.
மூணாறில் கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டுகளுக்கு ஜார்கண்ட், அசாம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து ஏஜென்ட் மூலம் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு வேலை செய்கின்றனர். தற்போது 3000க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பணியாமர்த்தும் முன் போலீஸ் ஸ்டேஷனில் ஆதார் உள்ளிட்ட முழு தகவல்களும் சேகரிக்கப்படுகிறது. அதேபோல் தோட்ட நிர்வாகமும் விசாரணைக்கு பிறகு பணி வழங்குகிறது. ஆனால் இந்த நடைமுறை முழுமையாக முறையாக பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எந்த அச்சமும் இன்றி தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.
ஜார்கண்ட்டில் 2021 மார்ச்சில் மூன்று போலீசார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய நக்சலைட் ஷகன்டுட்டிதினாபூ 30, இக்கம்பெனியில் கூடாரவிளை எஸ்டேட் பேக்டரி டிவிஷனில் ஒன்றரை ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்தார். அவரை அக்., 13 இரவு என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் கடந்த ஜனவரியில் துப்பாக்கியைக்காட்டி மிரட்டி பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாமுண்டாவும் 31, இதே கம்பெனியில் லெட்சுமி எஸ்டேட்டில் கடந்த செப்டம்பர் முதல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவரையும் நேற்று முன்தினம் மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.
இது போன்ற சம்பவங்கள் எஸ்டேட்டுகளில் பல தலைமுறைகளாக வேலை செய்யும் தமிழர்களான தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

