ADDED : மார் 15, 2025 09:40 PM
புதுடில்லி:மது பாட்டிலை உடைத்து டீ வியாபாரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு டில்லி கல்யாண்புரியில் நேற்று முன் தினம், டீ வியாபாரியான ஆஷிஷ்,24, தன் நண்பர்களுடன் ஹோலி கொண்டாடி விட்டு பைக்கில் வீடு திரும்பினார். அவருடன் நண்பர் விகாஸும் வந்தார். அப்போது, எதிரில் வந்த பைக் மீது ஆஷிஷ் பைக் மோதியது. அதில் வந்த பங்கஜ் குமார் சின்ஹா,30, ஜீது,27, ஆகிய இருவரும் மது போதையில் இருந்தனர். ஆஷிஷ் மற்றும் விகாஸுடன் தகராறு செய்தனர்.
திடீரென, பைக்கில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து ஆஷிஷ் தலையில் உடைத்தனர். மேலும், உடைந்த பாட்டிலை வைத்து ஆஷிஷ் கழுத்தை அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆஷிஷ் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீஸ், ஆஷிஷை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆஷிஷ் ஏற்கனவே இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பங்கஜ் குமார் சின்ஹா மற்றும் ஜீது ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் டில்லி மண்டவாலியைச் சேர்ந்த ஜீது ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.