பா.ஜ.,வினருக்கு மரியாதை, ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்: பிரதமருக்கு கார்கே கடிதம்
பா.ஜ.,வினருக்கு மரியாதை, ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்: பிரதமருக்கு கார்கே கடிதம்
ADDED : செப் 17, 2024 06:01 PM

புதுடில்லி: '' பா.ஜ., தலைவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் மரியாதையை கற்றுக் கொடுக்க வேண்டும்'', என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கூறிய கருத்துக்கு பா.ஜ.,மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ரவ்நீத் சிங் பிட்டு, பா.ஜ., தலைவர் தர்விந்தர் சிங், சிவசேனா எம்.எல்.ஏ., சஞ்சய் கெயிக்வாட் உள்ளிட்டோர் ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்கே கூறியுள்ளதாவது: ராகுலுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய, வன்முறையை தூண்டும் வகையில், மோசமான விமர்சனங்கள் வைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இதுபோன்ற நடைமுறை எதிர்காலத்திற்கு ஆபத்தானது.
ராகுலை பயங்கரவாதி என மத்திய அமைச்சர் மற்றும் உ.பி., அமைச்சரின் விமர்சனம் உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வன்முறையற்ற, சமூக நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றால் இந்திய கலாசாரம் உலகம் முழுதும் அறியப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என மஹாத்மா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்தால், காங்கிரஸ் மற்றும் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். வெறுப்பை தூண்டும் சக்திகளால் மஹாத்மா காந்தி, இந்திரா, ராஜிவ் ஆகியோர் உயிர்தியாகம் செய்துள்ளனர். ஆளுங்கட்சியின் அரசியல் நடைமுறை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.
பா.ஜ.,மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் மரியாதையை கற்றுக் கொடுப்பதுடன், முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும். இது போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க கடுமையான சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.