ADDED : டிச 08, 2025 05:10 AM

ஹுலிமாவு: ஏழாம் வகுப்பு மாணவரை அடித்த, உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஹுலிமாவில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணி செய்பவர் ராஜேஷ், 45. இப்பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவருக்கும், அவரது வகுப்பு நண்பருக்கும் கடந்த 4ம் தேதி தகராறு ஏற்பட்டது.
நண்பர் அமர்ந்திருக்கும் பெஞ்சை மாணவர் இழுத்தார். இதனால் நண்பர் கீழே விழுந்தார். இதுபற்றி ராஜேஷிடம், கீழே விழுந்த மாணவன் கூறினார். கோபம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர், பெஞ்சை இழுத்த மாணவனை வரவழைத்து சக ஆசிரியர்கள் முன்பு அடித்ததுடன், கன்னத்திலும் அறைந்து உள்ளார். பள்ளி முடிந்தும் மாணவனை வீட்டிற்கு விடாமல் கூடுதல் நேரம் காத்திருக்க வைத்து உள்ளார்.
வீட்டிற்கு சென்ற மாணவன், உடற்கல்வி ஆசிரியர் தன்னை அடித்தது பற்றி பெற்றோரிடம் கூறினார். இவர்கள் அளித்த புகாரின்படி ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த ஹுலிமாவு போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

